CRIME
கொடூரம்..! மண்ணுக்குள் இருந்து நீட்டிய கை… 6 மாதக் கர்ப்பிணியை கொன்று இளைஞர் செய்த காரியம்… உடல் மேல் உப்பை போட்டு… வாடகை வீட்டில் நடந்த பயங்கரம்..!!
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில், 6 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரைக் கொலை செய்து, அவரது உடலை வீட்டின் தோட்டத்திலேயே புதைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜெய்ப்பூரின் பிந்தாயகா பகுதியில் உள்ள பிரெஸ்டீஜ் காலனியில் இந்தத் துயரம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரவேஷ் (22) என்ற வாலிபர், கிரண் (32) என்ற பெண்ணைத் தனது மனைவி என்று கூறி கடந்த இரண்டு மாதங்களாக அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர் வழக்கமான மேற்பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிற்கு வந்தபோது, வீடு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்து சுற்றியுள்ளவர்களிடம் விசாரித்த அவர், தோட்டத்தின் மண் மேடாகக் காட்சியளித்ததைக் கவனித்துள்ளார். அங்குச் சென்று பார்த்தபோது, மண்ணுக்குள் இருந்து ஒரு பெண்ணின் கை வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மண்ணைத் தோண்டி கிரணின் உடலை மீட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரவேஷ் இரவோடு இரவாகத் தோட்டத்தில் குழி தோண்டி கிரணின் உடலைப் புதைத்துள்ளது தெரியவந்துள்ளது. குற்றத்தை மறைப்பதற்காக உடலின் மீது உப்பையும் கொட்டியுள்ளார். கொலை செய்த பிறகும் கடந்த 2, 3 நாட்களாக வீட்டிற்கு வந்து சென்ற பிரவேஷ், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தனது ஒப்பந்ததாரரிடம் பணம் கடன் வாங்கிக் கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். தற்போது காவல்துறையினர் தப்பியோடிய பிரவேஷைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
