LATEST NEWS
“விஜய்யை அப்படி பேசாதீங்க” மிசா பஞ்சாயத்து.. மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவை மீறிய திமுக ஐடி விங்..? அறிவாலயத்தில் வெடித்த அதிருப்தி..!!
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ‘மிசா’ கைது குறித்துப் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலையும் மீறி திமுகவினர் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளது அறிவாலய வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மிசா வரலாறு குறித்தும், திமுக தலைவர்களின் கடந்த காலச் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் விஜய் சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்கு திமுக ஐடி விங் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு நாகரிகமான முறையில் மட்டுமே பதில் அளிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ அல்லது அவரது குடும்பம் குறித்தோ யாரும் அவதூறாகப் பேசக் கூடாது என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னரே தனது கட்சியினருக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. விஜய்யின் விமர்சனங்களுக்கு ஸ்டாலின் நேரடியாக ஒரு வீடியோ பதிவின் மூலம் அரசியல் ரீதியான விளக்கத்தை அளித்திருந்தார்.
இருப்பினும், தங்களது தலைவரின் உத்தரவையும் மீறி திமுகவின் ஐடி விங் மற்றும் சில மூத்த நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களிலும் பொது மேடைகளிலும் முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துத் தரக்குறைவாகப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் நாகரிகத்தைத் தாண்டி திமுகவினர் சிலர் இவ்வாறு வன்மத்தைக் கொட்டியது மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
