LATEST NEWS
இடைத்தேர்தல் ட்விஸ்ட்..! முதல்வர் விஜய் மீது பரிவு காட்டும் சவுமியா அன்புமணி.. இக்கட்டான சூழ்நிலையில் பா.ம.க தலைமை.. என்ன செய்யப் போகிறார் அன்புமணி..?
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் பா.ம.க. யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சமீபத்தில் அ.தி.மு.க.விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவால் இந்த இடங்கள் காலியாகின. தற்போது இந்தத் தேர்தலில் போட்டியிட தி.மு.க., த.வெ.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, தங்களுக்குச் சாதகமாக ஆதரவு திரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இடைத்தேர்தல் நடக்கும் இரண்டு தொகுதிகளுமே தனித்தொகுதிகள் என்றாலும், குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இதனால், அங்குள்ள மக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்குப் பா.ம.க.வின் ஆதரவு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, அ.தி.மு.க. தரப்பு தங்களது கூட்டணியில் நீடிக்கும் பா.ம.க. தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள வேளையில், த.வெ.க. தரப்பிலிருந்தும் பா.ம.க.வுக்கு ரகசியமாகத் தூது அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில், பா.ம.க. தலைமை ஒரு இக்கட்டான அரசியல் குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வழக்கம்போல அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கும் மனநிலையில் இருந்தாலும், அவரது மனைவி சவுமியா அன்புமணி தற்போதைய முதலமைச்சர் விஜய் மீது தனிப்பட்ட முறையில் பரிவோடு இருப்பதாகத் தெரிகிறது. கட்சிக்குள்ளேயே நிலவும் இந்த மாறுபட்ட கருத்துகளால், பா.ம.க. இறுதி முடிவை எடுக்க முடியாமல் திணறி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
