LATEST NEWS
முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்த மோப்ப நாய் ராக்கி.. ராஜரத்தினம் மைதானத்தில் அரங்கை அதிரவைத்த கியூட் வைரல் வீடியோ..!!
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற காவல்துறை பதக்கங்கள் வழங்கும் சிறப்பு விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சருக்குக் காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்களை வழங்கித் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த விழாவின் மிக முக்கிய சுவாரசியமாக, காவல்துறையின் மோப்ப நாய் ‘ராக்கி’ தனது வாயில் ஒரு அழகான பூங்கொத்தைச் கவ்விக்கொண்டு வந்து முதலமைச்சர் விஜய்யிடம் நேரில் வழங்கியது. ராக்கியின் இந்த அன்பான மற்றும் விசித்திரமான செயல் விழாவில் பங்கேற்ற அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நெகிழச் செய்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மோப்ப நாய்களின் வியக்கத்தக்கப் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பலத்த கரவொலி எழுப்பித் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
