LATEST NEWS
திக் திக் திக்…! சாலையில் பொறி பறக்க பறந்த கார்… சினிமாவையே மிஞ்சிய போலீஸ் சேஸ்..! சிறுவன் மீது மோதிவிட்டு தப்பிக்கப் பார்த்த ஸ்கார்பியோ டிரைவர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ..!!
அசாம் மாநிலத்தின் நகோன் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 36-ல் ஒரு அதிர்ச்சிகரமான விபத்து சம்பவம் நடந்துள்ளது. கர்பி ஆங்லாங் பகுதியில் இருந்து கதியாடோலி நோக்கிச் சென்ற ‘ஸ்கார்பியோ’ வாகனம் ஒன்று, தோவா-ஹால்தியாதி அருகே சிறுவன் ஒருவன் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்தவுடன் வாகனத்தை நிறுத்தாமல், அதன் ஓட்டுநர் சிறுவனுக்கு உதவாமல் சம்பவ இடத்திலிருந்து நோனோய் திசையை நோக்கி அதிவேகமாகத் தப்பிச் சென்றார்.
மோதிய வேகத்தில் வாகனத்தின் ஒரு டயர் கடுமையாகச் சேதமடைந்தபோதிலும், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கியுள்ளார். சேதமடைந்த டயரின் மெட்டல் ரிம் தரையில் உராயும்போது சாலை முழுவதும் பொறிகள் பறந்தபடி கார் சில கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளது. காரைத் துரத்திச் சென்ற பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில், அந்த ஸ்கார்பியோ வாகனம் வழியில் இருந்த மேலும் சில வாகனங்கள் மீது மோதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறுதியில், நோனோய் பகுதியில் வைத்து காவல்துறையினர் அந்த ஸ்கார்பியோ வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். கார் நிறுத்தப்பட்டதும், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனத்தைச் சூழ்ந்து அதைச் சேதப்படுத்தினர். விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஹிட்-அண்ட்-ரன் சம்பவம், காரால் ஏற்பட்ட தொடர் விபத்துகள் மற்றும் கூட்டத்தினர் காரைச் சேதப்படுத்தியது ஆகியவை குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
