LATEST NEWS
வெறும் ரூ.1,449-க்கு 6 மாத பிராட்பேண்ட்… 700GB டேட்டா மற்றும் இலவச OTT சலுகையுடன் BSNL-இன் அதிரடி ஆஃபர்..!!
மத்திய அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம், இந்தியாவின் கிராமப்புற நுகர்வோரை இலக்காகக் கொண்டு ‘ரூரல் என்ட்ரி பிளான்’ என்ற பெயரில் மிக மலிவான புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் வெறும் 1,449 ரூபாய் விலையில் 6 மாத கால வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மற்ற தனியார் நிறுவனங்களின் ஒரு மாத கட்டணமே 1,000 ரூபாயைத் தாண்டும் நிலையில், கிராமப்புறங்களில் இணையப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்த அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 1,449 ரூபாய் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 25 Mbps வேகத்தில் மொத்தம் 700GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த 700GB அளவைத் தாண்டிய பிறகு, இணைய வேகம் 2 Mbps ஆகக் குறைக்கப்படும். அத்துடன், ‘பிரசார் பாரதி பிரீமியம்’ என்ற ஓடிடி தளத்தை இலவசமாகப் பயன்படுத்தும் வசதியும், லேண்ட்லைன் மூலமாக வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியும் இதில் அடங்கும். இருப்பினும், லேண்ட்லைன் சாதனத்தை வாடிக்கையாளர்கள் தனியாகத்தான் வாங்க வேண்டும்.
இதே திட்டம் ஒரு மாத கால வேலிடிட்டியிலும் கிடைக்கிறது, அதற்கு 259 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், 6 மாதத் திட்டமாக மொத்தமாகத் தேர்ந்தெடுக்கும் போது, மாதக் கட்டணம் தோராயமாக 241 ரூபாயாகக் குறைகிறது. இந்தத் திட்டக் கட்டணங்களுடன் அரசு விதிக்கும் கூடுதல் வரிகளும் (Taxes) சேர்க்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
