LATEST NEWS
“மசூதிகளுக்குத் தீவைப்பு” சுவர்களில் பழிவாங்குதல் எனப் பிரகடனம்… மேற்கு கரையில் இஸ்ரேலியர்கள் நடத்திய வெறித்தனமான தாக்குதலால் உச்சக்கட்டப் போர் பதற்றம்..!!
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்கில் இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து பாலஸ்தீன கிராமங்கள் மீது கொடூர வன்முறைத் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர். அண்மையில் நப்லஸ் நகருக்கு அருகே நடந்த மோதலில் இஸ்ரேலியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 4 பேர் காயமடைந்தனர். இந்த மோதலில் 2 இஸ்ரேலிய வீரர்களும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பென்யமின் நெதன்யாகு மேற்கு கரை முழுவதும் தீவிர ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக தால் கிராமத்தில் வீடுகளில் புகுந்து சோதனை நடத்திய இஸ்ரேல் ராணுவம், ஒரே நாளில் 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கைது செய்துள்ளது.
இந்த மோதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, ஆயுதங்களுடன் புகுந்த இஸ்ரேலிய குடியேறிகள் குஸ்ரா மற்றும் கூர் ஆகிய பாலஸ்தீன கிராமங்களில் உள்ள 2 மசூதிகளுக்குத் தீ வைத்துள்ளனர். மேலும், அங்குள்ள பாலஸ்தீனியர்களின் வாகனங்கள் மற்றும் விவசாய நிலங்களையும் தீயிட்டுக் கொளுத்திய வன்முறையாளர்கள், அங்கிருந்த சுவர்களில் ஹீப்ரு மொழியில் “பழிவாங்குதல்” என்று எழுதி வைத்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் காவல்துறை இருவரைக் கைது செய்துள்ள நிலையில், மேற்கு கரை பகுதி முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு பெரும் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் இந்த வெறித்தனமான வன்முறையைக் கண்டித்து இஸ்ரேலின் இடதுசாரி அமைப்பான ‘ஹதாஷ்’ மற்றும் ‘Mothers Against Violence’ ஆகிய அமைப்புகள் சார்பில் டெல் அவிவ் நகரில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற தீவிரப் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த 2023-இல் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை மேற்கு கரையில் மட்டும் 1,182 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், 13,000 பேர் காயமடைந்துள்ளனர், மற்றும் 24,000-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
