LATEST NEWS
“இது எங்க பொண்ணு இல்லையே..” வீட்டின் இறுதிச்சடங்கில் மாறிய சடலம்… சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் பயங்கர அலட்சியம்..!!
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாளர்களின் கடுமையான கவனக்குறைவால், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரின் சடலம் வேறொரு குடும்பத்தினரிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்கிய உறவினர்கள், அதனைத் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளைச் செய்யத் தொடங்கினர். அப்போது, இறுதி அஞ்சலியின் போது சடலத்தின் முகத்தைப் பார்த்த உறவினர்கள், அது தங்களது பெண் இல்லை என்பதை உணர்ந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
உடனடியாக அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரைந்து வந்து, அங்குள்ள பிணவறை ஊழியர்களிடம் சடலம் மாறியது குறித்து ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளின் விசாரணையில், 18 வயது இளம்பெண்ணின் சடலத்திற்குப் பதிலாக, விபத்தில் உயிரிழந்து பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 19 வயதுடைய வேறொரு இளம்பெண்ணின் சடலம் மாற்றி வழங்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தவறுதலாக 19 வயது பெண்ணின் சடலத்தை வாங்கிச் சென்ற குடும்பத்தினரை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாகத் தொடர்பு கொண்டது. பின்னர், இரண்டு குடும்பத்தினரின் முன்னிலையிலும் சடலங்கள் முறையாகச் சரிபார்க்கப்பட்டு, உரியவர்களிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் பிணவறை ஊழியர்களின் அலட்சியப் போக்கு குறித்துப் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளதோடு, தவறிழைத்த ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
