“இப்படியா பண்ணுவீங்க..?! சத்தம் போட்டதற்கு 10 மாணவிகளைப் பிரம்பால் வெளுத்து வாங்கிய ஆசிரியை… மருத்துவமனையில் மாணவிகள் அனுமதி..!ஆட்சியரிடம் தாய் கண்ணீர் புகார்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்படியா பண்ணுவீங்க..?! சத்தம் போட்டதற்கு 10 மாணவிகளைப் பிரம்பால் வெளுத்து வாங்கிய ஆசிரியை… மருத்துவமனையில் மாணவிகள் அனுமதி..!ஆட்சியரிடம் தாய் கண்ணீர் புகார்..!!”

Published

on

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்த ஆசிரியை தேன்மரியசுகந்தி என்பவர், சிறப்பு வகுப்பின் போது ஏற்பட்ட சத்தத்தால் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் அருகில் இருந்த 10-ம் வகுப்பு வகுப்பறைக்குச் சென்று, அங்கிருந்த மாணவ, மாணவிகளைப் பிரம்பால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் பவித்ரா, சுஜித்ரா, சரண்யா, சாய்ஸ்ரீ, ஆஷா, சந்தனமுத்துமாரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்குக் கைகளில் பலத்த காயங்களும் வீக்கமும் ஏற்பட்டுள்ளன.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகள் நடந்த சம்பவத்தைக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இதில் பவித்ரா மற்றும் சுஜித்ரா ஆகியோர் வீ.கே.புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், காயம் தீவிரமாக இருந்ததால் பவித்ரா தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று நாட்கள் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்றார். மேலும், சரண்யா, சாய்ஸ்ரீ உள்ளிட்ட பிற மாணவிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கைகளில் வீக்கம் குறையாததால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகின்றனர்.

Advertisement

இச்சம்பவம் குறித்து மாணவி பவித்ராவின் தாயார் ராஜாத்தி வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆசிரியை தேன்மரியசுகந்தி மீது பி.என்.எஸ். சட்டம் பிரிவு 115 மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்து, தன் மகள் இடைப்பருவத் தேர்வில் பங்கேற்க முடியாமல் போனதைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உரிய நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in