LATEST NEWS
இத பாத்தீங்களா..! 50,000 அடி உயரத்தில் மின்னிய அற்புத ஊதா நிற மின்னல்..! விண்வெளி வீரர் டான் பெட்டி எடுத்த அதிசய புகைப்படம்..!!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மேகங்களுக்கு இடையே ஏற்பட்ட ஊதா நிற மின்னலின் காட்சியை விண்வெளி வீரர் டான் பெட்டி புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 400 முதல் 420 கிலோமீட்டர் உயரத்தில், தாழ் புவி சுற்றுப்பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைந்துள்ளது. இது மணிக்கு 28,000 கிலோ மீட்டர் என்ற நம்ப முடியாத வேகத்தில் பயணிப்பதால், அதன் நிலை ஒவ்வொரு நொடியும் மாறுகிறது. அது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒருமுறை முழு கிரகத்தையும் சுற்றி வருவதால், அதிலுள்ள விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு நாளும் 16 சூரிய உதயங்களையும் 16 சூரிய அஸ்தமனங்களையும் காண முடிகிறது.
இந்த நிலையில் விண்வெளி வீரரான டான் பெட்டி என்பவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், “மேகங்கள் வழியாக பளிச்சிடும் பிரகாசமான ஊதா மின்னலின் கீழ் நோக்கிய காட்சிகள்” என்று மின்னலை புகைப்படம் எடுத்து குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர், இந்த இடி முழக்கங்கள் 50,000 அடி உயரம் வரை எட்டக்கூடியவை என்றும், இது பெரும்பாலான விமானங்கள் பறக்கும் உயரத்தை விட அதிகம் என்பதால், இவற்றை சுற்றுப்பாதையில் இருந்து முழுவதுமாக பார்த்து ரசிக்க முடியும் என்றும் கூறினார்.
கேமராவில் எடுக்கும் போது மின்னலின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் மேம்படுத்துவதற்காக, 1/1200 ஷட்டர் வேகத்துடன் கூடிய நிகான் Z9 கேமராவை பயன்படுத்தி, வினாடிக்கு 120 பிரேம்கள் என்ற விகிதத்தில் பதிவு செய்ததாக கூறினார். இந்த புகைப்படம் விண் சுற்றுப்பாதை கோணத்தில் இருந்து பார்க்கும் போது, உயர்ந்து நிற்கும் மேகங்களின் ஊடே பிரகாசமான ஊதா நிற மின்னல் ஊடுருவதை காட்டுகிறது. மேலும் இது, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அவர் படம்பிடித்த நுணுக்கத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
