DISTRICT NEWS
“அடேங்கப்பா..! நெசவாளர் வீட்டில் உதித்த 3 டாக்டர்கள்..!” அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வென்ற சகோதரர்கள்.. தமிழகத்தையே வியக்க வைத்த நெல்லை கிராமம்..!!
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தில், எளிய நெசவுக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் ஒரே நேரத்தில் நீட் தேர்வில் சாதனை படைத்து மருத்துவப் படிப்பிற்குத் தேர்வாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். கிருஷ்ணன் கோயில் தெருவில் வசிக்கும் நெசவாளர் ராம்குமார் – மங்கையர் திலகம் தம்பதியின் மூத்த மகன் வெங்கடஸ்ரீ மற்றும் இரட்டைச் சகோதரர்களான அருண், தரண் ஆகிய மூவருமே வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள் இடஒதுக்கீட்டின் கீழ் இரட்டைச் சகோதரர்களில் அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. மூத்த மகன் வெங்கடஸ்ரீக்கு பல் மருத்துவப் படிப்பு சீட் கிடைத்துள்ளது.
ஒரே வீட்டில் மூன்று மருத்துவர்கள் உருவாகும் இந்த வரலாற்றுச் சாதனை கிராம மக்களுக்கும், பள்ளிக்கும் பெரும் பெருமையைத் தந்துள்ள போதிலும், தற்போது இவர்களைப் படிக்க வைக்க வேண்டிய பொருளாதாரச் சூழல் தந்தை ராம்குமாருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. நெசவுத் தொழில் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்துக் கொண்டு, ஒரே நேரத்தில் மூன்று மகன்களின் மருத்துவப் படிப்பிற்கான செலவுகளை எப்படிக் கையாள்வது என்ற கவலை அவரிடம் நிலவுகிறது. இருப்பினும், சிறுவயது முதலே மருத்துவராவதையே இலக்காகக் கொண்டு கடின உழைப்பால் சாதித்த தங்களது பிள்ளைகளின் லட்சியக் கனவுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தடை போட விரும்பாமல், எப்படியாவது போராடி அவர்களை முழுமையான மருத்துவர்களாக்கப் போவதாக அந்த தந்தை மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
