CRIME
“உன்னையும் உன் மகனையும் விடமாட்டோம்..!” வாலிபரைத் தேடி வந்த 3 பேர் செய்த கொடூர காரியம்… அலறித்துடித்த தாய்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வேப்பம்பாளையத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒரு வீட்டின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேரைப் பெருந்துறை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி தூய்மைப் பணியாளரான ஜோதி (43) என்பவரின் மகன் கோபிநாத் (22), சில நபர்களிடம் ஒரு பொருளை வாங்குவதற்காகப் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கான பொருளையும் தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, நள்ளிரவு 1:30 மணியளவில் கோபிநாத்தின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று, “உன்னையும் உன் மகனையும் விடமாட்டோம்” என்று மிரட்டி, தீப்பற்ற வைத்த பெட்ரோல் பாட்டிலை வீசியுள்ளது. ஜன்னல் வழியாகப் பார்த்த ஜோதியின் முகம் மற்றும் கழுத்தில், பாட்டில் உடைந்து சிதறியதில் தீப்பற்றி அவர் படுகாயமடைந்தார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ஜோதியை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த பெருந்துறை போலீசார், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை விரிவாக ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், ஈரோடு பழையபாளையத்தைச் சேர்ந்த நவீன் (21), உழவன் நகரைச் சேர்ந்த ஜீவானந்தம் (21) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான இளைஞர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் நடந்த இந்த விபரீத பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
