CRIME
ஐயோ கொடுமையே… . காணாமல் போன மகள்… காவல் நிலையத்தில் தாய் கொடுத்த ஒரு புகார்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!
திருநெல்வேலி மாவட்டம், கொண்டாநகரை சேர்ந்த மகாராஜா என்பவரும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதி (34) என்பவரும் கடந்த 2008-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், அமராவதி காணாமல் போனதாக அவரது தாயார் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கணவர் மகாராஜாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே அமராவதியுடன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மகாராஜா கடந்த 2024-ஆம் ஆண்டு அகிலா (23) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இது தெரியவந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி கடந்த 2025 மே மாதம் ஏற்பட்ட தகராறில், அமராவதியை சமாதானம் பேசி இருசக்கர வாகனத்தில் பாப்பான்குளம் நவாஸ் குவாரிக்கு அழைத்துச் சென்ற மகாராஜா, அங்கு அவரை கடுமையாக தாக்கி, குவாரியில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.
மகாராஜா அளித்த தகவலின் பேரில், பாப்பான்குளம் நவாஸ் குவாரியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு சேலை, மனித மண்டை ஓடு, தொடை எலும்பு உள்ளிட்ட எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறை அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு அமராவதியுடையதுதானா என்பதை உறுதி செய்ய மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதோடு, இந்த கொலைக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
