CRIME
“கேஷ் வேணாம்.. கூகுள் பே பண்ணுங்க..!” ரூ.6.5 லட்சம் சுருட்டிய அவிநாசி அதிகாரிகள்.. வளைத்துப் பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை.. பரபரப்பு பின்னணி..!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் கட்டிட அனுமதி மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் முறைகளில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இருவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவிநாசி நகராட்சியில் சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் கேட்கப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான 12 பேர் கொண்ட அதிரடிப் படையினர் நேற்று மாலை நகராட்சி அலுவலகத்திற்குள் அதிரடியாகப் புகுந்தனர். வங்கியின் பிரதான கதவுகளைப் பூட்டிவிட்டு, மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக இந்த அதிரடிச் சோதனை நீடித்தது.
இந்த சோதனையின் போது அதிகாரிகளின் செல்போன்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் யு.பி.ஐ பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், கணக்கில் வராத ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.6,53,767 லஞ்சமாகப் பெறப்பட்டிருந்தது அம்பலமானது. குறிப்பாக, நகராட்சி சுகாதார ஆய்வாளர் அரவிந்த் என்பவரது கணக்கில் ரூ.5,53,767-மும், நகராட்சி மேலாளர் செல்வகுமார் என்பவரது கணக்கில் ரூ.1 லட்சமும் டிஜிட்டல் முறையில் லஞ்சமாகப் பெறப்பட்டிருப்பது உறுதியானது. இப்பணத்திற்கான முறையான விளக்கத்தை அளிக்க முடியாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, அங்கிருந்த 11 முக்கியமான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நவீன முறையில் லஞ்சம் வாங்கி சிக்கிய இந்தச் சம்பவம் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
