LATEST NEWS
“விஜய்யோட மாஸ் தாராபுரத்துல பாஸ் ஆகாது.. பெயிலியர் தான்..!” முதலமைச்சரை வறுத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்.. அனல் பறக்கும் தேர்தல் களம்..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, “முதலமைச்சர் விஜய் 2 நாள் அல்ல, 20 நாள் வந்து பிரசாரம் செய்தாலும் அவரது மாஸ் தாராபுரத்தில் பாஸ் ஆகாது. பெயிலியர் தான் ஆகும்” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார். தளவாய்பட்டினம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதி கருணாகரனை ஆதரித்துப் பேசிய அவர், தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 மாத காலத்தில் ரூ. 40,000 கோடி கடன் வாங்கியும் எந்தவொரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். கடுமையான மின்வெட்டு, காலை உணவுத் திட்டக் குளறுபடிகள் என அனைத்துத் துறைகளிலும் அவநம்பிக்கை நிலவுவதால், தவெக வேட்பாளரால் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தொகுதிக்குள் பிரசாரத்திற்கே செல்ல முடிவதில்லை என்றும் அவர் சாடினார்.
மேலும், அதிமுகவிலிருந்து பல எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்குச் செல்வார்கள் என்று செங்கோட்டையன் கூறிவருவது அவரது பகல்கனவு என்று விமர்சித்த ஆர்.பி.உதயகுமார், பதவி ஆசைக்கும் அதிகார ஆஃபர்களுக்கும் அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் இரையாக மாட்டார்கள் என்று திட்டவட்டமாகக் கூறினார். 54 ஆண்டுகால பாரம்பரியமிக்க இந்த இயக்கத்தை எந்தவொரு ‘ஓடுகாலி’யாலும் அழிக்க முடியாது என்றும், செங்கோட்டையன் மீண்டும் எடப்பாடியாரிடமே வந்து நிற்கும் காலம் விரைவில் வரும் என்றும் அவர் எச்சரித்தார். வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாராபுரத்தில் பிரமாண்ட தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
