LATEST NEWS
“குழந்தையும் போச்சு… ரூ. 6.7 கோடியும் போச்சு..! உண்மையை மறைத்த மருத்துவர்… ஜீன் எடிட்டிங் சிகிச்சையில் நடந்த கொடுமை..!!”
சீனாவில் ‘Mei’ என்ற புனைப்பெயர் கொண்ட 06 வயது சிறுமி, மூளை வளர்ச்சி தொடர்பான அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அச்சிறுமியின் மூளையிலுள்ள பிறழ்ந்த மரபணுவை மாற்றி, அவருக்குத் தேவையான புரதத்தைச் சுரக்க வைப்பதற்காகத் தலைமை நரம்பியல் நிபுணர் ஜிலாங் சியு தலைமையில் புதிய ஜீன் எடிட்டிங் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காகச் சிறுமியின் பெற்றோரிடம் இருந்து 800,000 டாலருக்கும் அதிகமான தொகை பெறப்பட்டது.
சிகிச்சையின் பகுதியாக, சிறுமியின் மூளையைச் சென்றடையும் வகையில் பல டிரில்லியன் வைரஸ்கள் அவரது தண்டுவடப் பகுதி வழியாகச் செலுத்தப்பட்டன. ஆனால், சிகிச்சை அளிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்த போதிலும், நரம்பியல் நிபுணர் ஜிலாங் சியு சிறுமியின் உயிரிழப்பு குறித்த எந்தவொரு குறிப்பையும் குறிப்பிடாமல், விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்துப் புகழ்பெற்ற ‘நேச்சர்’ (Nature) இதழில் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்.
மேலும், இந்த சிகிச்சையின் போது ஏற்படும் அபாயங்கள் குறித்துச் சிறுமியின் பெற்றோருக்குச் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும், மரண விவரங்கள் மறைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகாரைத் தொடர்ந்து, ஷாங்காய் ஜியாவோ டாங் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி சிறப்புக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 2018-இல் சீனாவில் ஜீன் எடிட்டிங் தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில், இச்சம்பவம் அந்நாட்டின் பயோடெக் துறையின் நம்பகத்தன்மைக்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
