LATEST NEWS
“ஹலோ நான் CM விஜய் பேசுறேன்” ஏஐ-ல் அலறும் சைபர் கிரைம்…முதல்வர் பெயரில் பாகிஸ்தான் லிங்க் டீப்ஃபேக் மோசடி… பெரும் அதிர்ச்சி..!!
தமிழ்நாடு முதலமைச்சர் பேசுவது போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முகநூல் மற்றும் பிற சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்தி மொழியிலான இந்த ஏஐ காணொளியில், பொதுமக்கள் பண உதவி தேவைப்பட்டால் ஒரு குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு மோசடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், முதலமைச்சரின் தோற்றத்தில் உள்ள இத்தகைய பல போலி ஏஐ காணொளிகள் பாகிஸ்தானைச் சேர்ந்த பேஸ்புக் ஐடிகளிலிருந்து பகிரப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்பொழுது இந்த மோசடிப் பதிவுகளை சமூக ஊடகங்களில் இருந்து நீக்குவதற்கும், சம்பந்தப்பட்ட போலியான ஐடிகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கும் மெட்டா நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற டீப்ஃபேக் காணொளிகளில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களையோ, வாட்ஸ்அப் குழுக்களையோ பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. முதலமைச்சர் பெயரில் நடக்கும் இந்த ஆள்மாறாட்ட மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இதனை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
