LATEST NEWS
“அய்யோ ச்சீ.. இப்படியா செய்வது..?” உணவகத்தில் ரொட்டி சுடுவதற்கு முன் எச்சில் துப்பிய நபர்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், உணவக ஊழியர் ஒருவர் தந்தூரி ரொட்டிகளைத் தயாரிக்கும்போது அதன் மீது எச்சில் துப்பிச் சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் பலவ்டாபகுதியில் இயங்கி வரும் ‘சாஹிர் அலி சிக்கன் பாயிண்ட்’ என்ற உணவகத்தில்தான் இந்தச் சுகாதாரமற்ற செயல் அரங்கேறியுள்ளது. அந்த உணவகத்தில் தந்தூரி ரொட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முஸ்தகீம் பாய்ஜான் என்பவர், ரொட்டி மாவைத் தட்டி அடுப்பில் வைப்பதற்கு முன்பாக அதன் மீது எச்சில் துப்பும் காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் கிளம்பியது. உணவகங்களில் சாப்பிடும் வாடிக்கையாளர்களின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலும், சுகாதார விதிகளை அப்பட்டமாக மீறும் வகையிலும் செயல்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினருக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றதையடுத்து, அதிகாரிகள் உடனடியாகச் சம்பந்தப்பட்ட உணவகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
வைரலான வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்த மீரட் காவல்துறையினர், ரொட்டியில் எச்சில் துப்பிய குற்றச்சாட்டின் பேரில் முஸ்தகீமை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நோய்த்தொற்றுகளைப் பரப்பும் செயல் மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமம் மற்றும் சுகாதாரத் தரம் குறித்தும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
