LATEST NEWS
“.3 கோடி கார், 5 ஹெலிகாப்டர் ”… ஆனால் சாப்பாட்டுக்கு அடிதடி… வைரலாகும் பிரம்மாண்ட திருமண வீடியோ… வசைபாடும் நெட்டிசன்கள்…!!
பீகார் அரசியல்வாதி அனந்த் சிங்கின் மகள் ஷிவாங்கி சிங்கின் திருமண விழா நவம்பர் 25 அன்று பாட்னா மாவட்டத்தில் உள்ள நத்வான் கிராமத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரிஷிகேஷ் குமார் என்பவருடன் நடந்த இத்திருமணத்தில் சுமார் நான்கு லட்சம் விருந்தினர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன; பாரம்பரிய பீகார் உணவுகள், தோசை, இட்லி, பீட்சா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன.
ஐந்து ஹெலிகாப்டர் தளங்கள், வெற்றியாளருக்கு மஹிந்திரா தார் பரிசு வழங்கப்பட்ட குதிரைப் பந்தயம் மற்றும் மாப்பிள்ளைக்கு சுமார் ரூ. 3 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் பரிசளிக்கப்பட்ட செய்திகள் கவனம் ஈர்த்தாலும், உணவு வழங்கும் இடங்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு உணவுக்காகப் பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் வரிசையாக நிற்காமல் முண்டியடித்த காட்சிகளைப் பார்த்த சமூக வலைதளவாசிகள் பலரும் பொது ஒழுக்கம் மற்றும் அடிப்படை நாகரிகம் குறித்துக் கடுமையாக விமர்சித்தனர். பொறுமையின்மை, குறுகிய கால வீடியோக்களின் தாக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவையே இதுபோன்ற நடத்தைகளுக்குக் காரணம் எனச் சிலர் கருத்து தெரிவித்த நிலையில், பஃபே மற்றும் வரம்பற்ற உணவு விடுதிகளில் வசதியானவர்களும் இத்தகைய போக்குடன் நடந்துகொள்வதைச் சுட்டிக்காட்டி மற்றொரு தரப்பினர் விவாதித்தனர்.
