CRIME
“மணமேடை ஏறும் முன் மர்ம மரணம்”! பெங்களூரு இளம்பெண் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு… கடைசி போன் காலில் சிக்கிய கல்லூரி நண்பன்…!!
பெங்களூருவின் கே.பி. அக்ரஹாரா பகுதியில் உள்ள கடப்பசுவாமி மடத்திற்கு அருகே 24 வயதான பூமிகா என்ற இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜனவரி மாதம் கிரண் என்பவருடன் அவருக்குத் திருமணம் நடைபெற இருந்த நிலையில், குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இறந்த பூமிகாவின் கழுத்தில் மஞ்சள் கயிறு (அரிஷின கொம்பு)இருந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கர்நாடகாவில் திருமணத்துடன் தொடர்புடைய சின்னமாகக் கருதப்படும் இது, திருமணத்திற்கு முன்பே அவர் கழுத்தில் இருந்தது ஏன், கிரண் தவிர வேறொருவருடன் அவருக்குத் திருமணம் நடந்ததா அல்லது குடும்பத்தினரிடம் ஏதேனும் மறைக்கப்பட்டதா என்ற கேள்விகள் காவல்துறையினர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் எழுந்துள்ளன.
தற்கொலைக்குச் சற்று முன்பு பூமிகா தனது கல்லூரித் தோழரான கௌதம் என்பவருக்குத் தொலைபேசியில் பேசியுள்ளார். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு பழைய கல்லூரி நண்பர்களுடன் சென்ற சுற்றுலாவில் கௌதமும் பங்கேற்றதாகவும், இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு மற்றும் அடிக்கடி போன், வீடியோ கால் பேச்சுகள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து கௌதமின் செல்போனைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், தற்கொலைக்கு முன்பு இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் மற்றும் கால் விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். கே.பி. அக்ரஹாரா காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணமாக வழக்குப் பதிவு செய்து, கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு, கௌதமுடனான தொடர்பு மற்றும் திருமண விவரங்கள் ஆகிய அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
