LATEST NEWS
“விளையாடுவது முருகப்பெருமானிடம் என்பதை மறந்துவிடாதீர்கள்..” மத்திய அமைச்சரின் பேச்சால் வெடித்த சர்ச்சை..! கொதித்தெழுந்து மாணிக்கம் தாகூர் கொடுத்த பதிலடி..!!
சென்னையில் நடைபெற்ற அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதைத் தடுக்க முடியும் என்றும், இதனால் கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை அரசு புண்படுத்தியுள்ளது என்றும் பேசினார். மேலும், இன்று தீபம் ஏற்றாதவர்கள் நாளை பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதைத் தடுப்பார்கள் எனக் கூறிய அவர், உலகத்தரத்தில் நவீனமயமாக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரெயில் நிலைய உச்சியில் தீபம் ஏற்றப்படும் என்றும், அதனால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதோடு, 300 ஆண்டுகளாகப் பக்தியுடன் ஏற்றப்பட்டு வரும் திருக்கார்த்திகை தீபத்தையும் இடம் மாற்ற முயற்சித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் “ரயில்வே ஸ்டேஷன் மீது தீபம் ஏற்றுவோம்” என்று பக்தர்களின் நம்பிக்கையைக் கேலி செய்யும் விதமாகப் பேசுவதும், அதைப் பலரும் கைதட்டி ரசிப்பதும் வேதனையளிக்கிறது என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். அரசியலுக்காகத் தொடர்ந்து உண்மையான முருக பக்தர்களின் மனதைப் புண்படுத்தி வரும் பாஜகவினரையும் மத்திய அமைச்சரையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும், தாங்கள் கேலி பேசுவதும் விளையாடுவதும் முருகப்பெருமானிடம் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
