LATEST NEWS
“AI வந்தால் மனிதர்கள் சிந்திப்பதை நிறுத்திவிடுவார்களா..?” புதின் எழுப்பிய கேள்விக்கு இந்தியச் சிறுவன் கொடுத்த நெத்தியடி பதில்.. மாஸ்கோ மாநாட்டில் நடந்த நெகிழ்ச்சி..!!
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ‘ஏஐ ஜர்னி 2026’ சர்வதேச மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எழுப்பிய முக்கியக் கேள்விக்கு 16 வயது இந்தியச் சிறுவன் ரவுல் ஜான் அஜு அளித்த முதிர்ச்சியான பதில் உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்து உரையாடிய அதிபர் புதின், “செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்பி நாம் சுயமாகச் சிந்திப்பதை நிறுத்திவிடுவோமா?” என்றும், AI-ஐ அதிகம் சார்ந்திருப்பது மனிதர்களின் சிந்திக்கும் திறனைப் பாதிக்காதா என்றும் கேள்வி எழுப்பினார். உலகத் தலைவர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் பங்கேற்ற அந்த மேடையில், கேரளாவைச் சேர்ந்த இளம் தொழில்நுட்ப வல்லுநரான ரவுல் ஜான் அஜு, புதினின் கேள்விக்குத் துளியும் தயக்கமின்றித் தெளிவான விளக்கத்தை அளித்தார்.
அதிபர் புதினின் கேள்விக்குப் பதிலளித்த ரவுல் ஜான் அஜு, மனிதர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சார்ந்திருக்காமல், அதனுடன் இணைந்து செயல்படும் அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று குறிப்பிட்டார். AI என்பது மனித மூளைக்கு மாற்றாக இல்லாமல், மனிதர்களின் சிந்தனைக்கும் படைப்பாற்றலுக்கும் துணையாகச் செயல்படும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார். 16 வயதுச் சிறுவனின் இந்த ஆழமான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட பதிலைக் கேட்டு வியந்த அதிபர் விளாடிமிர் புதின், ரவுலின் சிந்தனையை வெகுவாகப் பாராட்டினார்.
மேலும், ரவுல் ஜான் அஜுவின் தொழில்நுட்ப அறிவையும் புதுமையான கண்டுபிடிப்புகளையும் பாராட்டிய அதிபர் புதின், இத்தகைய இளைஞர்களின் தொழில்நுட்பப் பங்களிப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்குப் பெரிதும் உதவும் என்றும் குறிப்பிட்டார். இளம் வயதிலேயே செயற்கை நுண்ணறிவுத் துறையில் பல சாதனைகளைப் படைத்து வரும் ரவுல், சர்வதேச மேடையில் ரஷ்ய அதிபரிடம் நேருக்கு நேர் உரையாடிப் பாராட்டுப் பெற்றிருப்பது இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
