CRIME
“பிரியாணி சாப்பிட்டது ஒரு குத்தமாப்பா..?!” பள்ளியில் கொடுத்த கொடூர தண்டனை.. 16 வயது எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் டபுவா காலனியில் உள்ள பள்ளி ஒன்றில், ‘பிரியாணி’ சாப்பிட்ட விவகாரத்தில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு 11-ஆம் வகுப்பு மாணவிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதால், அவர் மனமுடைந்து பள்ளியின் 3-ஆவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. நவோதயா வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவி, பள்ளியில் பிரியாணி சாப்பிட்டது தொடர்பாக அங்குள்ள ஒரு பெண் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி நிர்வாகம், அந்த மாணவியைப் பல மணி நேரம் வகுப்பறையில் நிற்க வைத்துத் தண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தீவிர அவமானத்தாலும் மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளியின் மூன்றாவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த மாணவியின் தந்தை பிரமோத் குமார், பள்ளி நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். “காலை இரண்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினேன், ஆனால் மாலையில் ஒரு குழந்தை மட்டுமே வீடு திரும்பியது. இடைப்பட்ட அந்த 3 மணி நேரத்தில் என் மகளுக்குப் பள்ளியில் என்ன நடந்தது, அவளுக்கு ஏன் இந்தத் தண்டனை வழங்கப்பட்டது?” என்று அவர் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விபத்து நடந்தவுடன் தங்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகம் மறைக்க முயன்றதாகவும், தற்பொழுது பள்ளிக்குத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு அதிகாரிகள் அனைவரும் தலைமறைவாகிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஃபரிதாபாத் போலீஸார், பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தற்கொலைக்கான அசல் காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
