CRIME
“டியூஷனுக்குப் போன இடத்தில் இப்படியா…?” தாயின் கண்முன்னே 13 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பாலாநகர் பகுதியில், நேற்று மாலை தாயுடன் ஸ்கூட்டரில் டியூஷனுக்குச் சென்ற 13 வயது பள்ளி மாணவி நவ்யஸ்ரீசத்யா, அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் பேருந்தின் சக்கரத்தின் கீழ் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாலாநகர் பகுதியைச் சேர்ந்த கே.ராஜு என்பவரின் மகளான நவ்யஸ்ரீசத்யா, அங்குள்ள எச்.ஏ.எல் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். பாலாநகர் கமான் அருகே தாய் தனது மகளை ஸ்கூட்டரில் அழைத்துச் சென்ற போது, பின்னால் வந்த குஷாயிகுடா டிப்போவைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துப் பேருந்து இவர்களது வாகனத்தின் பின்புறமாகப் பலமாக மோதியுள்ளது.
பேருந்து மோதிய அதிவேகத்தில், ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நவ்யஸ்ரீசத்யா கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கிப் பலத்த காயமடைந்தார். விபத்து நடந்த அடுத்த கணமே, அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த கோர விபத்தின் போது அதிர்ஷ்டவசமாகத் தாய் இடதுபுறமாகச் சரிந்து விழுந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தன் கண்முன்னே பெற்ற மகள் துடிதுடித்து இறந்த அதிர்ச்சியில் உறைந்துபோன தாய் அளித்த புகாரின் பேரில், பாலாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
