CRIME
“பாம்பு கடிச்சா நாய் கடி ஊசியா..?!” 4 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. அரசு டாக்டரின் அப்பட்டமான அலட்சியம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!1
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், நான்கு வயதுக் குழந்தைக்குப் பாம்பு கடித்ததற்குப் பதிலாக நாய் கடிப்பதற்கான தடுப்பூசி போடப்பட்ட கொடூரமான மருத்துவ அலட்சியச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைக்குப் பாம்பின் விஷத்தை முறிப்பதற்காக உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையில் ‘ஆன்டி-வெனம்’ என்ற விஷமுறிவு ஊசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அங்கிருந்த அரசு மருத்துவர், கடுமையான அலட்சியத்துடன் பாம்பு கடித்த அந்தக் குழந்தைக்கு நாய் கடித்தால் போடப்படும் ‘ஆன்டி-ரேபிஸ்’ தடுப்பூசியைச் செலுத்தியுள்ளார்.
தவறான ஊசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பிஞ்சு குழந்தையின் உடல்நிலை மிக மோசமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றது. இதனால் பதறியடித்த குடும்பத்தினர், குழந்தையை உடனடியாக அங்கிருந்து மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையின் இந்த அப்பட்டமான மற்றும் பொறுப்பற்ற அலட்சியம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுக்கச் செய்துள்ளது.
