LATEST NEWS
5 ஆண்டுகளாகத் தேடியும் கிடைக்காத பெண்.. ஒரே ஒரு பழைய போட்டோவை வைத்து மரமத்தை உடைத்த AI… கண்டுபிடித்தபோது போலீஸுக்கே காத்திருந்த ட்விஸ்ட்..!!
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது மஞ்சு கர்வார் என்ற பெண்ணை, அவரது சமீபத்திய புகைப்படம் இல்லாத நிலையிலும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். திருமணம் செய்து வைப்பதாகக் கூறி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரை அழைத்துச் சென்றதாக அவரது தாயார் கிஸ்மத் தேவி கடந்த ஜூலை 14ஆம் தேதி பபானி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பல ஆண்டுகளாகத் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகப் பபானி காவல் நிலையக் காவலர் விஜய் பாண்டே, மஞ்சு நான்காம் வகுப்பு படித்தபோது 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சிறுவயது புகைப்படம் மற்றும் அவரது பெற்றோர், சகோதரியின் புகைப்படங்களைக் கொண்டு ChatGPT மற்றும் Google Gemini போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மூலம் தற்போதைய வயதுக்கு ஏற்ற சாத்தியமான முகத்தோற்றத்தை உருவாக்கினார். அந்தப் படத்தைக் கண்ட குடும்பத்தினர் மஞ்சுவை அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் தேடுதலைத் தீவிரப்படுத்தினர்.
கடந்த அக்டோபர் 16ஆம் தேதி கிடைத்த தகவலின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள ஹமீர்வாஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிப்படை போலீசார் மஞ்சுவை பாதுகாப்பாக மீட்டனர்; அங்கு அவர் தனது கணவர் உமேந்திரா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. நீண்டகால வழக்கில் AI தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்தி சிறப்பாகச் செயல்பட்ட காவலர் விஜய் பாண்டேவுக்கு உத்தரப் பிரதேச காவல்துறை தலைமை இயக்குநர் ரூ.5,000 ரொக்கப் பரிசும், சோன்பத்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.2,100 பரிசும் வழங்கிக் கவுரவித்தனர்.
