LATEST NEWS
“எனக்கு எல்லாமே ஸ்டாலின் தான்” கலைஞர் குடும்பத்துடனான பாசம்… கவுன்சிலர் பதவி தந்தவர்… கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவுக்குப் பின் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
கடந்த நவம்பர் 19-ஆம் தேதி காலமான கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு, தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனியார் ஊடகத்திற்கு அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில், மு. க. ஸ்டாலினுடன் தனக்கு இருந்த நெருக்கமான பழக்கத்தையும், தனது குடும்பத்தின் நீண்டகால திமுக பின்னணியையும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
கவுன்சிலர் பதவி தொடங்கி பல்வேறு முக்கியக் கட்சிப் பொறுப்புகள் வரை தனக்கு வழங்கியவர் ஸ்டாலின் தான் என்றும், தனக்கு எல்லாமே அவர்தான் என்றும் வி. எஸ். பாபு அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், தங்கள் குடும்பம் பாரம்பரிய திமுக குடும்பம் என்றும், கலைஞர் மற்றும் ஸ்டாலின் ஆகியோருடன் குடும்ப ரீதியாக நெருங்கிப் பழகியவர் தான் என்றும், அதனாலேயே ஸ்டாலின் மீது இப்போது விமர்சனம் வைக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
வட சென்னைப் பகுதிகளில் திமுகவின் அடிமட்டக் கட்சிப் பணிகள் மூலம் ‘புரசை பாபு’ என அறியப்பட்ட இவர், 2011-ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டபோது தேர்தல் பணிகளை முன்னின்று நடத்தியவர். பின்னர் ஏற்பட்ட உட்கட்சி மாற்றங்கள் மற்றும் பொறுப்பு நீக்கங்களுக்குப் பிறகு 2016-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவர், 2026 பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் கொளத்தூரில் போட்டியிட்டு, அப்போதைய முதலமைச்சராக இருந்த மு. க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கவனம் பெற்றார். இத்தகைய அரசியல் பயணத்திற்குப் பின்னணியில் ஸ்டாலினுடன் இருந்த நெருக்கத்தை அவர் வெளிப்படையாகப் பேசியிருந்த அந்த வீடியோ, அவரது மறைவுக்குப் பிறகு மீண்டும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
