LATEST NEWS
தவெக ஆட்சியில் உயிருக்கும், பயிருக்கும் பாதுகாப்பில்லை.. கொஞ்சம் கூட அக்கறை இல்லாத… தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை குறித்து டி.ஆர்.பி. ராஜா ஆவேசம்..!!
தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை என முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும், விளைந்த பயிரைக் கருகாமல் காப்பாற்றத் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், இதைவிட ஒரு டெல்டா விவசாயிக்கு வேறென்ன கொடுமை வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காவிரியில் 11 டிஎம்சி பற்றாக்குறை நீரைப் பெறச் சரியான வாதங்களை எடுத்து வைக்கத் திறனற்ற தவெக அரசின் இரண்டு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேட்டூர் அணையிலும் தண்ணீர் இல்லை, பருவ மழையும் பெய்யவில்லை என்றும், இதைப் பற்றி அரசுக்குக் கொஞ்சம் கூட அக்கறை இல்லை என்றும் விமர்சித்துள்ள அவர், இதனால் டெல்டாவில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
டெல்டாவில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் தங்கள் சொந்தப் பணத்தில் தண்ணீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியபடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியபடி வறட்சிப் பாதிப்பைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்குத் தேவை வெற்றி வாக்குறுதிகள் அல்ல, தண்ணீரும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் என்றும் டி.ஆர்.பி. ராஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
