CRIME
பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்: மகளைப் பேருந்தில் அனுப்பிவிட்டுத் திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பெண் ஒருவரைக் கடத்த முயன்ற துணிகரச் சம்பவத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சஹஸ்த்ரதாரா சாலையில் இந்தத் திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் புதன்கிழமை அதிகாலை தனது மகளைப் பள்ளிப் பேருந்தில் ஏற்றி விடுவதற்காகச் சென்றுள்ளார். பேருந்தில் அனுப்பிவிட்டு அவர் தனது வாகனத்தில் தனியாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, கருப்பு நிற ஸ்விஃப்ட் காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். திடீரென காரை பெண்ணின் வாகனத்திற்கு முன்பாக நிறுத்தி அவரது வழியை மறித்துள்ளனர்.
காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி காரின் உள்ளே இழுக்க முயன்றது சிசிடிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனால் நிலைதடுமாறிய அந்தப் பெண் தைரியமாக அவர்களை எதிர்த்துப் போராடியதுடன், காப்பாற்றுமாறு சத்தமாகக் கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வருவதைக் கண்ட கொள்ளையர்கள், பயந்துபோய் காரை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினர்.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் ராய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்துத் தெரிவித்த காவல்துறை அதிகாரி வந்தனா வர்மா, குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியின் பிற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கார் எண்ணை வைத்து மர்ம நபர்களைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்
