CRIME
“அய்யோ மாப்பிளைக்கு என்னாச்சு..?” ரிசப்ஷன் மேடையில் மனைவியுடன் சிரித்தபடி போட்டோ எடுத்த மணமகன்.. அடுத்த நொடியே மயங்கி விழுந்தகொடூரம்.. 24 மணி நேரத்தில் சிதைந்த புதுமண வாழ்க்கை..!!
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில், திருமணம் முடிந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணமகன் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவில் மருத்துவராகப் பணியாற்றி வந்த டாக்டர் பவன் குமாருக்கும், அருகிலுள்ள சாந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வெகு விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதியினருக்கு உறவினர்களும் கிராம மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்த நிலையில், இந்த எதிர்பாராத துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருமணத்தைத் தொடர்ந்து நவம்பர் 26-ஆம் தேதி மாலை மணமகன் வீட்டில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; இதில் ஏராளமான உறவினர்களும் ஊர் மக்களும் கலந்து கொண்டனர். வரவேற்பு மேடையில் மணமக்களான டாக்டர் பவன் குமாரும் அவரது மனைவியும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். புகைப்படம் எடுத்து முடித்த அடுத்த நொடியே, டாக்டர் பவன் குமார் திடீரென நிலைதடுமாறி மேடையிலேயே மயங்கிச் சரிந்து விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காகப் பூர்னியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே டாக்டர் பவன் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணக் கோலத்தில் இருந்த மணமகன் 24 மணி நேரத்திற்குள் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினரையும் ஒட்டுமொத்த கிராமத்தையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
