LATEST NEWS
பத்ரிநாத் தரிசனம் முடிந்து திரும்பியபோது கொடூரம்… 60 வினாடிகளில் மலை மோதி நொறுங்கிய ஹெலிகாப்டர்.. பெங்களூரு வழக்கறிஞர்கள், இன்ஸ்பெக்டர் உட்பட 6 பேர் பலி..!!
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிப் புறப்பட்ட ஹெலிகாப்டர், சாமோலி மாவட்டம் பாண்டுகேஷ்வர் பகுதிக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு இளம் வழக்கறிஞர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பெங்களூரு நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த சுதிர் (50) மற்றும் சங்கர் கவுடா (39) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தங்களது நண்பர்களுடன் பத்ரிநாத் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1:13 மணியளவில் பத்ரிநாத்தில் இருந்து புறப்பட்ட டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், அடுத்த ஒரு நிமிடத்திற்குள் (1:14 மணி) அடர்ந்த மேகமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதியில் மோதி நொறுங்கியது. இந்த அசம்பாவிதத்தில் ஹெலிகாப்டரை இயக்கிய கேப்டன் ஹிமான்ஷு, பெங்களூரு சிசிபி இன்ஸ்பெக்டர் அருண் சானுங்கே, வழக்கறிஞர்கள் சுதிர், சங்கர் கவுடா, நட்ராஜ் மற்றும் பிரதாப் கவுடா ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மலைப்பகுதியின் கடுமையான நிலப்பரப்பையும், இரவின் அடர்ந்த இருளையும் பொருட்படுத்தாமல் இந்திய ராணுவம், என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். சிதைந்த ஹெலிகாப்டரில் இருந்து 6 பேரின் உடல்களும் நள்ளிரவில் பத்திரமாக மீட்கப்பட்டு ஜோஷிமத் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. வழக்கறிஞர்களின் மறைவுக்குப் பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள நிலையில், நிர்வாக நடைமுறைகள் முடிந்தவுடன் உடல்களைச் சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு அனுப்பத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
