LATEST NEWS
அடக்கடவுளே.! உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.. கால்வாய் கரையில் வீடியோ எடுத்தபோது கால் வழுக்கி விழுந்து 3 இளைஞர்கள் கொடூரமாக பலி..!!!
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம் சாகர் அணைக்கட்டின் லட்சுமி பாசன கால்வாய் பகுதியில், செல்போனில் ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோ எடுக்க முயன்றபோது ஏற்பட்ட கொடூர விபத்தில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 4 நண்பர்கள் ஒன்றிணைந்து கால்வாயின் ஆபத்தான கரையில் நின்றுகொண்டு, சமூக வலைத்தள பக்கங்களுக்காக விசித்திரமான முறையில் வீடியோக்களைப் பதிவு செய்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு இளைஞரின் கால் வழுக்கியதால், நிலைதடுமாறி அருகில் நின்றிருந்த மற்ற நண்பர்களின் மீது விழுந்துள்ளார். இதனால் கரையில் நின்றிருந்த 4 பேரும் சங்கிலித் தொடர் போல ஒருவர் மீது ஒருவர் விழுந்து, கால்வாயில் சீறிப்பாய்ந்து சென்ற வேகமான தண்ணீருக்குள் அடுத்தடுத்து விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக உள்ளூர் காவல் துறைக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் ஆற்று நீரில் தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்தி, இதுவரை 3 இளைஞர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு இளைஞரின் நிலை என்னவென்று தெரியாததால், அவரைப் பத்திரமாக மீட்பதற்கான தேடும் பணி தற்போதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தள மோகத்தால் இளைஞர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான இடங்களில் வீடியோ எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
