CRIME
“தற்கொலையா? கொலையா..?” 9 தூக்க மாத்திரைகள்… மனைவி மரணத்தில் 3 மணிநேர மர்மம்.. ஆண் குழந்தைக்காகக் கணவன் போட்டகொடூர திட்டம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்து வந்த பெண் பொறியாளர் ஆர்த்தி யாதவ் என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் இது தற்கொலையாகப் பார்க்கப்பட்ட நிலையில், ஆர்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் இந்த வழக்கின் போக்கையே மாற்றியுள்ளன. ஆர்த்திக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆண் குழந்தைக்காகக் கணவர் நிலேஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு வந்ததாகவும், அதற்குத் தடையாக இருந்த ஆர்த்தியைக் கணவர், மாமனார் மற்றும் மைத்துனன் சேர்ந்து கொலை செய்து தற்கொலையாகச் சித்தரிக்க முயன்றுள்ளதாகவும் தாயார் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், கணவர் நிலேஷின் போதைப்பழக்கமும் குடும்பத் தகராறுகளுக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று காலை 8 மணிக்கு ஆர்த்தி 9 தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், சுயநினைவை இழக்கும் ஒருவர் அடுத்த 3 மணி நேரத்தில் தானே தூக்கில் தொங்க முடியாது என்பதால், தூக்க மாத்திரை கொடுத்து மயக்கமடையச் செய்தே அவரைத் தூக்கில் தொங்கவிட்டுள்ளார்கள் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். உடலைக் கைப்பற்றியுள்ள காவல் துறையினர் உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உடற்கூறாய்வின் முதற்கட்ட அறிக்கை, தடயவியல் சோதனை முடிவுகள் மற்றும் குடும்பத்தினரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் மட்டுமே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது உறுதியாகும் எனப் போலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு அரசு பெண் பொறியாளருக்கே நேர்ந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
