CRIME
“என்னை அங்க சித்ரவதை பண்ணுறாங்க…” அரசு கொடுத்த போலி வேலை… டெல்லியில் சிறைபிடிக்கப்பட்ட நர்ஸ்… முதலமைச்சர் வீட்டின் முன் அலறிய தாய்…!!
பிஹார் மாநில அரசு பாட்னாவில் நடத்திய பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனக் கடிதம் பெற்ற ஜி.என்.எம் செவிலியர் ஒருவர், டெல்லியில் கடத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. TV9 ஹிந்தி செய்தியின்படி, அப்பகுதியைச் சேர்ந்த ரூபம் குமாரி என்ற செவிலியருக்கு மாதச் சம்பளம்.ரூ.48,000 என்ற வாக்குறுதியுடன் ‘ஹேகம்’ என்ற நிறுவனத்தின் பணி நியமனக் கடிதம் அரசு முகாமில் வழங்கப்பட்டது. ஆனால் அவர் டெல்லி சென்று சேர்ந்தபோது, மருத்துவமனைக்கு பதிலாக ஒரு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு, கட்டாயப்படுத்தி சட்டவிரோத மற்றும் முறையற்ற செயல்களில் ஈடுபடுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தும், உணவு தராமலும் சித்திரவதை செய்துள்ளனர்.
அங்கு சிறுவர், சிறுமிகள் பலரும் அடைத்து வைக்கப்பட்டு, வீடியோ கால்கள் மூலமாக பேரம் பேசப்பட்டு மனித வர்த்தகத்திற்கு ஆளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட செவிலியர் குற்றம் சாட்டியுள்ளார். தன்னை ஆண்களுக்கு முன்னால் கட்டாயப்படுத்தி நிறுத்த முயன்றதாகவும், அதற்கும் மறுத்ததால் டாய்லெட் கழுவ வைத்துப் பூட்டி வைத்ததுடன், வெளிநாட்டிற்கு கடத்தவும் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் நரக வேதனையை அனுபவித்த பிறகு, செப்டம்பர் 6 அன்று காவலுக்கு இருந்த மூத்த பெண் வெளியே சென்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, செவிலியர் தனது கணவரைத் தொடர்புகொண்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இரு குழந்தைகளுக்குத் தாயான இவர், குடும்பத்தின் பொருளாதாரச் சூழலை உயர்த்தவே பாட்னாவில் பார்த்த ரூ.15,000 சம்பள வேலையை விட்டுவிட்டு டெல்லி சென்றிருந்தார். தற்போது பழைய வேலையும் போய்ச் சேர்ந்ததால், தனது குழந்தையின் பள்ளிச் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
பாதிக்கப்பட்ட செவிலியர் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்துப் புகார் அளிக்க பிஹார் முதலமைச்சர் வீட்டிற்குச் சென்றபோதிலும், முன்அனுமதி இல்லை எனக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆகஸ்ட் 19 முதல் 23 வரை பாட்னாவில் உள்ள ஞான் பவனில் அரசு சார்பில் நடத்தப்பட்ட இந்த வேலைவாய்ப்பு முகாமில் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், உரிய பின்னணி விசாரணை இன்றி அக்டோபர் 2025-இல் பதிவு செய்யப்பட்ட போலி அல்லது சந்தேகத்திற்குரிய பிளேஸ்மென்ட் நிறுவனங்களுக்கு அரசு மேடையை வழங்கி பணி நியமனக் கடிதங்களை விநியோகித்தது இளைஞர்களின் பாதுகாப்பிற்குப் பெருத்த அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இளைஞர்களின் இடப்பெயர்ச்சியைத் தடுப்போம் என அரசு அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக, இதுபோன்ற முறையான ஆய்வுகள் இல்லாத செயலால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
