CRIME
“வீட்டின் முன் சிறுநீர் கழித்ததை கேட்டதே தப்பா..?” நடுரோட்டில் வியாபாரிக்கு நேர்ந்த விபரீதம்.. போதை கும்பலின் வெறிச்செயல்.. பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வீடுகள் மற்றும் சந்தையின் முன்பாக மதுபோதையில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட அமித் குப்தா என்ற வாகன வியாபாரி, நான்கு பேரால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அமித்தை நடுரோட்டில் வீழ்த்தி, அவரது தலையில் பலத்த காயம் ஏற்படும் வரை வெறித்தனமாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அமித் குப்தா இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்தின் முழுமையான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அச்சு அசலாகப் பதிவாகியுள்ளது.
குடும்பத்தினர் இந்த சிசிடிவி ஆதாரங்களை ஒப்படைத்த போதிலும், கான்பூர் போலீஸார் 72 மணி நேரத்திற்குப் பிறகே வழக்குப் பதிவு செய்துள்ளனர்; மேலும், இதுவரை அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி யாரையும் கைது செய்யவில்லை. அமித்தின் மனைவி ஷாலினி குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாததால் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சமடைந்து நடுங்கி வருகின்றனர். ஒரு வீட்டின் முன்னால் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று கூறியதற்காக ஒரு மனிதனை இப்படி கொடூரமாகக் கொன்று, ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்தியுள்ள இந்த அநீதிக்கு நீதி வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.
