LATEST NEWS
இது என்ன மருத்துவமனையா..? இல்ல பழைய பேப்பர் கடையா..? ஆஸ்பத்திரியில பிளாஸ்டர் இல்லையாம்… பழைய அட்டைப்பெட்டியை வச்சு கட்டுப்போட்ட கொடூரம்.. பீகார் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!!
பீகாரின் கைமூர் மாவட்டத்திலுள்ள மோஹனியா துணைப்பிரிவு மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவருக்கு, எலும்பு முறிவு ஏற்பட்ட காலில் பிளாஸ்டர் அல்லது மருத்துவ ஸ்பிளிண்டிற்குப் பதிலாக அட்டைப் பெட்டியைப் பிணைத்து சிகிச்சையளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சஹ்பாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த உமராவதி தேவி, கரிஷ்மா குமாரி மற்றும் பிரின்ஸ் குமார் ஆகியோர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். இதில் பிரின்ஸ் குமாரின் காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அதைச் நிலைநிறுத்த போதுமான மருத்துவக் கருவிகள் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அட்டைப் பெட்டித் துண்டைக் கொண்டு காலைக் கட்டி, மேல் சிகிச்சைக்காக வாரணாசிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களும் புகைப்படங்களும் வெளியானதைத் தொடர்ந்து, பீகாரின் அரசு சுகாதாரத்துறை நிர்வாகத்தின் அவலநிலை குறித்துப் பொதுமக்கள் கடுமையாகக் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான விபத்து நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில், அடிப்படை முதலுதவி மற்றும் எலும்பு முறிவுக்கான ஸ்பிளிண்ட் உபகரணங்கள் கூட இல்லாதது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், “இது என்ன பீகாரின் புதிய மருத்துவத் தொழில்நுட்பமா? இதை மாநிலத்தை விட்டு வெளியே பரவ விடாமல் தடுக்க வேண்டும்” என்று பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
தேவையான உள்கட்டமைப்பு மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் இல்லாத காரணத்தால், இந்த மோஹனியா மருத்துவமனை வெறும் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்குத் திருப்பிவிடும் ‘ரெஃப்ரல் சென்டராக’ மட்டுமே செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளியின் காலைச் சரியாக நிலைநிறுத்தாமல் அட்டைப் பெட்டியைக் கட்டி நீண்ட தூரம் அழைத்துச் செல்லும்போது, நரம்புகள் மற்றும் தசையில் கூடுதல் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகப் பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அரசு மருத்துவமனைகளின் அவசரக்கால செயல்பாடுகள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த தீவிர விவாதத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது.
