LATEST NEWS
“வகுப்பறைகளை மதுபார் ஆக்கிய உங்களை மக்கள் மன்னிப்பார்களா..?” மு.க.ஸ்டாலின் கொடுத்தது மருத்துவம்… நீங்கள் கொடுப்பது போதை..! தவெக அரசை வெளுத்து வாங்கிய அப்பாவு..!!
கல்லூரிகளைப் போதைப்பொருள் விற்பனை மையங்களாகவும், வகுப்பறைகளை மது குடிக்கும் பாராகவும் மாற்றிய உங்களையும் உங்கள் கட்சியினரையும் மக்கள் மன்னிப்பார்களா? இதற்குப் பிறகும் வாயைத் திறக்காமல் கலக்கத்தில், மயக்கத்தில் கள்ள மெளனத்தில் இருக்கிறீர்களே முதல்வர் சார் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவை தனியார் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்துள்ள போதைப்பொருள் பயன்பாடு குறித்துக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததாக மாணவர் அமுதன், 20 பேர் கொண்ட மாணவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அடுத்த 3 தினங்களில் சென்னை திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் தினேஷ், போதைப்பொருள் பயன்படுத்தியதைக் காட்டிக்கொடுத்ததாக 30 பேர் கொண்ட கும்பலால் ஈவிரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டுக் காவல்துறை பயனற்ற சினிமாவில் தோன்றும் காவல்துறையாக மாறிவிட்டதோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நீட் பயிற்சி சென்ற மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய கொடுமை காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் உங்கள் கவனத்திற்கு வரவில்லையா அல்லது ஒட்டுமொத்த காவல்துறையையும் உங்கள் நண்பர்களிடமே கொடுத்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா என்றும் அவர் வினவியுள்ளார். தமிழ்நாட்டில் பெரும்பாலான உங்கள் கட்சியினர் தான் காவல்துறை ஒத்துழைப்போடு தங்கு தடையின்றி மாணவ-மாணவிகளிடம் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் கொடுத்தார், நீங்களோ மாணவ-மாணவிகளைத் தேடி மதுவைக் கொடுக்கிறீர்களே என்றும் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
