LATEST NEWS
புகார் வந்தப்போ அமைதியா இருந்துட்டு.. இப்போ எதுக்கு இவ்ளோ ‘ஓவர் ரியாக்ட்’ பண்றாங்க…?” திமுகவை மடக்கிய அமைச்சர் நிர்மல்குமார்..!!
ஜெம் வீரமணி வழக்கு தீவிரடைந்துள்ள நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “திமுக ஜெம் வீரமணி வழக்கில் ‘ஓவர் ரியாக்ட்’ செய்கிறார்கள். இதைச் சாதாரணமான விஷயமாகக் கடந்து போக முடியாது. எல்லா இடத்திலும் இது மாதிரியான பல வழக்குகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன; எத்தனை வழக்குகளை இவர்கள் மூடி மறைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. இது மாதிரியான முக்கியமான மோசமான வழக்குகளை திமுக கையாண்ட விதத்தை நாம் எல்லாம் பார்த்ததுதான். முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வீடியோ ஷேடாக இருந்தது, அதனால் இந்த வழக்கை நிறுத்தி வைத்தோம், அதன் பிறகு ஆதாரம் வந்தால் தொடங்குவோம் என்று கூறுகிறார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இது சாதாரணமாகக் கடந்து போகும் விஷயம் கிடையாது. ഇപ്പോழுதும் திமுக, வீரமணியைக் காப்பாற்றும் நோக்கில்தான் செயல்படுகிறது. ஏன் திமுக இவ்வளவு ‘ஓவர் ரியாக்ட்’ செய்கிறது? திமுக ஆட்சியில் 2024 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகார் ஜாயிண்ட் கமிஷனர் வரை சென்றுள்ளது. அப்பொழுது இந்தப் புகார் முதல்வருக்கும் போயிருக்க வேண்டும். எவ்வளவு பெரிய விஷயம்! பெரிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புகாரில் முன்னாள் முதல்வர் என்ன இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தார்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “காவல்துறைக்குப் பொறுப்பு அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் முன்னாள் முதல்வர்தான் இருந்தார். எதனால் இந்த வழக்கு 2024இல் பதிவு செய்யப்படவில்லை? அதன் பிறகு பல பேர் பேரம் பேசி அவரிடம் பணம் கொடுத்ததாகச் செய்தித்தாள்களில் வருகிறது. இவ்வளவு தூரம் பலபேர் உள்ளே புகுந்து பேரம் பேசும் பொழுது ஏன் மு.க.ஸ்டாலின் அமைதியாக இருந்தார்? மீண்டும் இந்த வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து, ஆதாரம் இல்லை என முடித்துள்ளார்கள். போதுமான ஆதாரம் இல்லை என்று இந்த வழக்கை முடித்துள்ளார்களா? அல்லது போதுமான பேரம் முடிந்ததனால் இந்த வழக்கை முடித்துள்ளார்களா? இதுதான் எங்கள் கேள்வி” என்று அவர் தெரிவித்தார்.
