CRIME
அய்யோ கொடுமையே.. பள்ளிப் பை கொண்டுவரலனு இப்படியா..? 5 வயது சிறுவனைத் தரையில் தூக்கி வீசி காலை உடைத்த கொடூர ஆசிரியர்… கதறும் பெற்றோர்…!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகவா காவல் எல்லைக்குட்பட்ட மடிகேடா கிராமத்தைச் சேர்ந்தவர் 5 வயது சிறுவன் நீரஜ் லோதி. இவர் ஓம் சரஸ்வதி ஞான மந்திரம் என்ற தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி, பள்ளியின் நிர்வாகியும் வாகன ஓட்டுநருமான ரவீந்திர சுக்லா சிறுவனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுவன் பள்ளிப் பையைக் கொண்டு வரவில்லை எனக் கூறி, ஆசிரியர் அவனை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
தாக்குதலின் போது ஆசிரியர் சிறுவனைத் தரையில் தூக்கி வீசியதால், அவனது தொடைக்குக் கீழ் காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிறுவன் வலியால் கதறியுள்ளான். பின்னர் அந்த ஆசிரியர் சிறுவனை அவனது வீட்டிலேயே கொண்டு போய் விட்டு, மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார். சிறுவனின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவனின் காலில் அறுவை சிகிச்சை செய்து கம்பி (Rod) பொறுத்தியுள்ளனர்.
மருத்துவத்திற்கு அதிகச் செலவானதால், பெற்றோர் அந்த ஆசிரியரிடம் பணம் கேட்டபோது அவர் தர மறுத்துவிட்டார். இதையடுத்துச் சிறுவனின் பெற்றோர் பகவா காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் ஆசிரியர் ரவீந்திர சுக்லா மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிறுவனை எக்ஸ்ரே மற்றும் மருத்துவப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்துப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
