CRIME
“காவல் நிலையமா, ரவுடிகளின் கூடாரமா?”.. இன்ஸ்பெக்டர் அறையிலேயே வியாபாரிக்கு விடுக்கப்பட்ட பகிரங்கக் கொலை மிரட்டல்… உ.பி.யில் அதிர்ச்சி…!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் சதர் பஜார் காவல் நிலையத்திற்குள், காவல் நிலைய அதிகாரி முன்னிலையிலேயே வியாபாரி ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாதேவ் காலனியைச் சேர்ந்த பிளைவுட் கடை உரிமையாளர் அமன் யாதவின் கடையில் சில நாட்களுக்கு முன்பு முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல் நடத்தியது தொடர்பான சமரசப் பேச்சுவார்த்தையின்போது இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர் தரப்பைச் சேர்ந்த ராகுல் என்பவர் பேச்சுவார்த்தையின் போது திடீரென ஆத்திரமடைந்து, அமன் யாதவைத் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, காவல்துறையினர் முன்பே “சுட்டுக் கொன்றுவிட்டுச் சிறைக்குச் சென்று விடுவேன்” என வெளிப்படையாக மிரட்டியுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே இத்தகைய மிரட்டல் விடுக்கப்பட்டதால், சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகக் கூறினாலும், வைரலாகும் காணொளி மற்றும் கொலை மிரட்டல் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் காவல் நிலைய அதிகாரி நேம்சந்த் தெரிவித்துள்ளார்.
