CRIME
“இவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்”… மாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டி மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய கும்பலால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!
ஹரியானா மாநிலம் பானிபட் ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் கும்பல் ரயில் பெட்டியைச் சேதப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பயணிகள் சிலர் மாற்றுத்திறனாளிகள் பெட்டியின் கதவை ஆக்ரோஷமாகத் தட்டுவதும், அவர்களில் ஒருவர் கல்லை எடுத்துக் கதவின் கண்ணாடி மீது வீசி உடைப்பதும் பதிவாகியுள்ளது.
வான்ஷ் அரோரா என்ற எக்ஸ் தளப் பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இவர்கள், கதவு திறக்கப்படாததால் கல்வீசித் தாக்குதல் நடத்தி ஜன்னல் மற்றும் கதவுக் கண்ணாடிகளை உடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொதுச் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயண உரிமை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். வீடியோ பகிரப்பட்ட நேரம் வரை போலீசார் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ரயில்வே நிர்வாகம் இதுகுறித்துப் பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
