CRIME
“அவளத்தான் கல்யாணம் பண்ணுவேன்..” 2 குழந்தைகளின் தாயைக் காதலித்த மகன். உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற தாய்.. விசாரணையில் அம்பலமான பகீர் பின்னணி..!!
வேறு ஜாதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயைக் காதலித்துத் திருமணம் செய்ய விரும்பிய மகனை, அவரது சொந்தத் தாயே உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஜக்கேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதுடைய சிவம்மா. இவரது மகன் முத்துராஜ் (33), பெங்களூரு மத்திகெரே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு அங்கேயே தங்கியிருந்தார். வார விடுமுறை நாட்களில் மட்டும் சொந்த ஊருக்குச் சென்று வந்த அவர், அப்போதும் கேட்டரிங் வேலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே, முத்துராஜுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் வரன் தேடி வந்துள்ளனர். ஆனால் ஏற்ற வரன் அமையாத நிலையில், தன்னுடன் பழக்கத்தில் இருந்த திருமணமான பெண் ஒருவரை முத்துராஜ் காதலிக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருந்த அந்தப் பெண் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் திருமணத்திற்குத் தாய் சிவம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், தாயின் எதிர்ப்பையும் மீறி அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என முத்துராஜ் பிடிவாதமாக இருந்துள்ளார்.
இந்தச் சூழலில், கடந்த நவம்பர் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்காகச் சொந்த ஊரான ஜக்கேனஹள்ளி கிராமத்திற்குச் சென்றிருந்த முத்துராஜ், அன்று இரவு வீட்டிற்கு வெளியே கட்டில் போட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த அவரது சகோதரி சென்று பார்த்தபோது, கட்டில் முழுவதும் ரத்தம் பரவிய நிலையில் முத்துராஜ் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, முதற்கட்டமாக சிவம்மா மற்றும் அவரது மகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறி இருவரும் அழுதுள்ளனர். இருப்பினும், சிவம்மாவின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சிவம்மாவே, தூங்கிக்கொண்டிருந்த முத்துராஜை உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிவம்மாவைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
