CRIME
“வீட்டு வாசலில் நின்று வீடியோ எடுத்ததே தவறா..?” கலவரத்தை செல்போனில் வீடியோ எடுத்த 25 வயது இளைஞர்… ஜன்னல் வழியாகப் பாய்ந்த அந்த ஒரு குண்டால் நடந்த பேரதிர்ச்சி.. உறைய வைக்கும் பின்ணணி..!!
கர்நாடக மாநிலம் ஹோஸ்கோட் தாலுகாவில் உள்ள சோலூர் கிராமத்தில், ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியின்போது ஏற்பட்ட மோதலில், சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த 25 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் லிகித் கவுடா என அடையாளம் காணப்பட்டுள்ளார். ‘ஆஷ்ரயா’ திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்குவதற்காக அப்பகுதியில் 3 ஏக்கர் 25 குண்டா நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனை ஒட்டியிருந்த 10 குண்டா நிலத்தை ரமேஷ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு ரமேஷ் முன்னிலையிலேயே நில அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்ட நிலையில், அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை முன்னாள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் நாகராஜு உள்ளிட்ட சுமார் 10 பேர் ஜே.சி.பி இயந்திரத்துடன் ஆக்கிரமிப்பு நிலத்தைச் சமப்படுத்தும் பணிக்காக அங்கு சென்றனர். அப்போது, தற்காப்பிற்காகத் தனக்கு வழங்கப்பட்ட இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் அங்கு வந்த ரமேஷ், நிலத்தைச் சமப்படுத்தக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். நில அளவீட்டிற்கு ஏற்கனவே சம்மதித்ததையும், ஏழைக் குடும்பங்களுக்காகவே இந்த நிலம் தயார்படுத்தப்படுவதையும் அங்கிருந்தவர்கள் எடுத்துக் கூறியபோதும், அதனை ஏற்க மறுத்த ரமேஷ் ஆத்திரத்தில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய ரமேஷ், சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்து பதுங்கிக் கொண்டார். அப்போது, தனது வீட்டின் முன்பு நின்றபடி இந்தக் கலவரத்தை லிகித் கவுடா தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதனைக் கவனித்த ரமேஷ், வீட்டின் ஜன்னல் வழியாக லிகித் கவுடாவை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதில், குண்டு அவரது மேல் வயிற்றுப் பகுதியில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த லிகித் கவுடா, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டைத் தடுக்க ஓடி வந்த பரத் என்பவர் துப்பாக்கியின் குழலைப் பிடிக்க முயன்றபோது கையில் காயமடைந்தார்; மேலும் கெம்பராஜு என்பவரின் கன்னத்தில் குண்டு உரசிச் சென்றதில் அவரும் காயமடைந்த நிலையில், இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பெங்களூரு ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திரகாந்த், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஹோஸ்கோட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளி ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
