CRIME
“3.5 மாத இன்ஸ்டாகிராம் காதல் வலை.. அமெரிக்கா விசா ஆசை..!” ‘ஹனி டிராப்’ மூலம் ரவுடியை வரவழைத்து போட்டுத் தள்ளத் திட்டம்.. ரோத்தக் ஹோட்டல் துப்பாக்கிச் சூட்டின் பகீர் பின்னணி..!!
ஹரியானாவின் ரோத்தக் நகரில் உள்ள மிலன் ஹோட்டலில் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், மாதக்கணக்கில் திட்டமிடப்பட்ட ‘ஹனி டிராப்’ சதித்திட்டம் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தாதா ஹிமான்ஷு பாவ் மற்றும் ரவுடி சன்னி ரிட்டோலியா கும்பல்களுக்கு இடையேயான நீண்டகாலப் பகைமையே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகும். தனது சகோதரன் ரோஹித் மற்றும் மாமா பஜ்ரங் ஆகியோரின் கொலைகளுக்குப் பழிவாங்கத் திட்டமிட்ட ஹிமான்ஷு பாவ், தனது கூட்டாளி சாஹில் மூலமாக ஒரு பெண்ணை ரிட்டோலியாவுக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளார். சுமார் மூன்றரை மாதங்களாக இன்ஸ்டாகிராம் வழியாகப் பழகி ரிட்டோலியாவின் நம்பிக்கையைப் பெற்ற அந்தப் பெண்ணுக்கு, ரிட்டோலியா இருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்தால் அமெரிக்காவிற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தன்று இரவு ரிட்டோலியா அந்தப் பெண்ணுடனும், தனது கூட்டாளிகளான ரிங்கு, யாஷ் மற்றும் வினீத் ஆகியோருடனும் மிலன் ஹோட்டலுக்கு இரவு உணவிற்காகச் சென்றிருந்தபோது, முகமூடி அணிந்த ஐந்து துப்பாக்கிதாரிகள் உள்ளே புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஹோட்டலில் சுமார் 50 பேர் இருந்த நிலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், முக்கிய இலக்கான சன்னி ரிட்டோலியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்; ஆனால் அவரது மூன்று கூட்டாளிகளும், உறவினரைச் சந்திக்க வந்திருந்த ஹிமான்ஷு என்ற அப்பாவி இளைஞர் ஆள்மாறாட்டத்தாலும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஹோட்டலில் பதிவான சிசிடிவி காட்சிகளில், தாக்குதலின் போது கருப்பு உடை அணிந்த அந்தப் பெண்ணும் அங்கிருந்தது பதிவாகியுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, சன்னி ரிட்டோலியாவிடமிருந்து தனக்குப் பழிவாங்கும் ஆபத்து ஏற்படும் என அஞ்சிய அந்தப் பெண், உடனடியாக பாங்காக்கிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பல கொலை முயற்சிகளில் இருந்து தப்பியுள்ள ரிட்டோலியாவைத் தீர்த்துக்கட்ட, ஹிமான்ஷு பாவ் மற்றும் ரதி கும்பல்கள் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த நான்கு கொலைகள் தொடர்பாக ரோத்தக் மற்றும் ஜஜ்ஜார் காவல்துறையைச் சேர்ந்த 10 தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
