LATEST NEWS
ஒரு வாரத்தில் இரண்டாவது மெகா அடி.. “மேற்கு வங்க பிஸ்லெரி குடிநீரிலும் பாக்டீரியா..” ஆய்வகப் பரிசோதனையில் வெளிவந்த பேரதிர்ச்சி.. FSSAI எடுத்த அதிரடி ஆக்ஷன்..!!
பிரபல குடிநீர் பாட்டில் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எதிராக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மீண்டும் ஒரு அதிரடி சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிஸ்லெரி ஆலையிலிருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியில், கழிவுநீர் கசிவு அல்லது சேதமடைந்த குழாய்கள் வழியாகத் தண்ணீரில் கலக்கக்கூடிய ‘கோலிஃபார்ம் பாக்டீரியா’ இருப்பது முதன்மை மற்றும் பரிந்துரை ஆய்வகப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 20, 2026 அன்று தயாரிக்கப்பட்ட ‘PB 201’ என்ற குறிப்பிட்ட பேட்ச் குடிநீர் விற்பனைக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ ஏற்கனவே தடை விதித்திருந்த நிலையில், தற்போது அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரவும் அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்குள் பிஸ்லெரி நிறுவனத்திற்கு எதிராக எஃப்எஸ்எஸ்ஏஐ எடுத்துள்ள இரண்டாவது சட்ட நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலையில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ‘புரோமேட்’ ரசாயனம் இருந்ததால் அது பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்த நிலையிலும், பரிந்துரை ஆய்வகச் சோதனையில் ‘பாலிநியூக்ளியர் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள்’ எனப்படும் ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006-ன் கீழ் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.
பாதுகாப்பானது என நம்பி மக்கள் வாங்கிப் பருகும் முன்னணி நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்களிலேயே பாக்டீரியா மற்றும் ஆபத்தான ரசாயனங்கள் கண்டறியப்பட்டிருப்பது நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள பிஸ்லெரி நிறுவனம், தங்களது குடிநீர் முழுமையான பாதுகாப்பானது என்றும், எஃப்எஸ்எஸ்ஏஐ எழுப்பியுள்ள பிரச்சினைகள் மற்றும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
