LATEST NEWS
“உன் மதம் சிறந்தது வழிபடு.. என் மதமும் சிறந்தது வழிவிடு..” திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் செயல்பாட்டை விமர்சித்த சீமான்..!!
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்ட நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சீமான், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை முன்கூட்டியே கைது செய்திருக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியிலும் சரி, தற்போது உள்ள ஆட்சியிலும் சரி, திருப்பரங்குன்றம் விவகாரம் சாதாரணமாகக் கையாண்டிருக்க வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டார்.
“உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழிவிடு” என்பதுதான் கோட்பாடு என்று கூறிய சீமான், சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கும், கோயிலில் இந்துக்கள் விளக்கேற்றுவதற்கும் அரசே உரிய பாதுகாப்பு கொடுத்தால் பிரச்னை முடிந்துவிடும் எனத் தெரிவித்தார். அவர்கள் தர்காவில் வழிபடுவதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்றும், இவர்கள் தீபம் ஏற்றுவதற்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அரசே பாதுகாப்பு வழங்கி தீபம் ஏற்ற அனுமதித்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவ்வாறு செய்திருந்தால் இந்தப் பிரச்சனை முடிந்திருக்கும் என்றும், இதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் சீமான் கூறினார். திமுக அரசே இதைச் சரிசெய்திருக்க வேண்டும்; ஆனால், விட்டுவிட்டார்கள் எனச் சுட்டிக்காட்டிய அவர், இனி ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்னை உருவாகிக்கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்.
