LATEST NEWS
முதலைக் கண்ணீர் வடிக்காதீங்க… “தீர்ப்பை மீறச் சொல்லி உத்தரவிட்ட Political Bosses யார்?” உச்ச நீதிமன்றத்தின் ஒற்றைக் கேள்வியில் ஆடிப்போன தமிழக நிர்வாகம்..!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் தங்களது “அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்ப” செயல்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அவர்கள் திட்டமிட்டு, வேண்டுமென்றே மீறியுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, மதுரை மாவட்ட ஆட்சியரின் மன்னிப்பை நிராகரித்து அதனை “முதலைக் கண்ணீர்” என விமர்சித்தது.
நேற்று பிறப்பிக்கப்பட்ட இந்த அதிரடி உத்தரவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் அர்ச்சகர்களுடன் ஆலோசித்து, இன்று (நவம்பர் 28) கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுவை உடனடியாக இடைநீக்கம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கோவில் நிர்வாகத்தை உடனடியாகத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு தீபம் ஏற்றும் பணிகளை மேற்கொள்ள, மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. பார்த்திபன் ஆகியோரைக் கூட்டுப் பொறுப்பாளர்களாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. அத்துடன், திருப்பரங்குன்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை மாநில காவல்துறையிடமிருந்து மாற்றி, மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இறுதியாக, தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அறங்காவலர் குழுவினர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர் 10 நாட்களுக்குள் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் வரும் டிசம்பர் 15-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.
