LATEST NEWS
“ரூ.10 லட்சம் கேட்டு மனைவி வீட்டார் டார்ச்சர்”… மகன் உயிரிழந்த அதே தண்டவாளத்தில் 4 மாதங்களுக்குப் பிறகு தந்தையும் விபரீத முடிவு… கான்பூரில் நெஞ்சை உலுக்கும் சோகம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் சக்கேரி பகுதியில், நான்கு மாதங்களுக்கு முன்பு தமது மகன் சச்சின் திவாரி தற்கொலை செய்துகொண்ட அதே ரயில் தண்டவாளத்தில், 55 வயதான தந்தை பிரகாஷ் நாராயண் திவாரியும் வியாழக்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கோயிலுக்குச் செல்வதாகக் கூறி மாலை ஐந்து மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் இரவு முழுவதும் திரும்பாத நிலையில், வெள்ளிக்கிழமை காலை ராமாதேவி பாலத்தின் கீழ் உள்ள தண்டவாளத்தில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. தகவலறிந்து காவல் நிலையம் சென்ற அவரது மகளிடம், உடல் மீட்கப்பட்டது குறித்து காவல்துறையினர் தெரிவித்தனர்; ஆரம்பக் கட்ட விசாரணையில் அவர் கடும் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது.
பூஜை மற்றும் சடங்குகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த பிரகாஷ் நாராயண், தமது சுமையைக் குறைக்கும் மகனாக சச்சினை எண்ணி வந்ததாகவும், ஆனால் மகனின் இழப்பு அவரை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தி உடைத்துவிட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். சச்சினின் குழந்தைப்பருவம், வளர்ப்பு மற்றும் திருமணம் தொடர்பான நினைவுகள் அவரைத் தொடர்ந்து வாட்டி வந்தன.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த சச்சினுக்குத் திருமணமான சுமார் இரண்டு மாதங்களிலேயே, மனைவி மற்றும் மாமனார் வீட்டாரின் துன்புறுத்தலாலும், ரூ. 10 லட்சம் கேட்டு அவர்கள் விடுத்த மிரட்டலாலும் மனமுடைந்து அதே இடத்தில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக அவரது சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். இளைய மகனையும் தொடர்ந்து குடும்பத் தலைவரையும் இழந்ததால் குடும்பத்தினர் பெருந்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்; சடலம் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
