LATEST NEWS
“கல்யாண வீட்டுக்கு போன இடத்தில் நேர்ந்த கொடூரம்”.. நடுவழியில் நடந்த திடீர் திருப்பம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி…!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியின் கோஹ்லான் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த கோர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அருகிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த எஸ்யுவி ரக வாகனம் மலைப்பாதையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும், பள்ளத்தாக்கில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், வாகனத்தில் பயணித்த ஐந்து பேரில் சையத் ஷபீக் ஷா (26), அவரது மனைவி ரஷிதா பானோ (25), சகோதரி தில்னாஸ் பாத்திமா (17) மற்றும் உறவுக்காரச் சகோதரி ஷாஹிதா பாத்திமா (27) ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தினர்.
திருமண வீட்டிலிருந்து திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 11 வயது சிறுமி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாரமுல்லாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
