LATEST NEWS
“பத்லாபூரில் தெரு நாயால் அதிர்ச்சி”.. நாயிடம் இருந்து தப்பி ஓடிய இளைஞர் உயிரிழப்பு…. கடிக்காமலேயே உயிரைப் பறித்த சோகம்!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் பத்லாபூர் பகுதியில், தெருநாயிடம் இருந்து தப்பி ஓடிய 18 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் ஹர்ஷல் ஷிண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது நண்பரை வழியனுப்புவதற்காக பத்லாபூர் மேற்கில் உள்ள சனி நகர் பகுதிக்குச் சென்றபோது, ஒரு தெருநாய் அவரைத் துரத்தியுள்ளது.
நாயின் தாக்குதலுக்குப் பயந்து அருகிலிருந்த கடை நோக்கி ஹர்ஷல் வேகமாக ஓடியபோது, திடீரெனக் கீழே விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்லாபூர் கிராமப்புற மருத்துவமனை மருத்துவர்களின் கூற்றுப்படி, நாய்க்குப் பயந்து வேகமாக ஓடியதால் இதயத்தில் ஏற்பட்ட அதிக அழுத்தமே மாரடைப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பத்லாபூர் நகரத்தில் அதிகரித்து வரும் தெருநாய்கள் பிரச்சினை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. நகரில் சுமார் 15,000 தெருநாய்கள் இருப்பதாகவும், நாய் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண விரிவான நடவடிக்கை தேவைப்படுவதாகவும் மேயர் ருசிதா கோர்படே தெரிவித்துள்ளார்.
